ராவணன் – சிறப்பு திரைவிமர்சனம்

கம்ப ராமாயணத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம். வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்… ராவணன் கெட்டவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் ராவணன் மாபெரும் வீரன். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி! அந்த வகையில் இது ஒரு புதுமையே!
மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவ்ஆனந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.

வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட… ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.

தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவ்ஆனந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா… எஸ்.பி. தேவ்ஆனந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல… அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.

ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்… 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்… என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.

ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.

சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்… அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.

வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.

எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே… என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.

அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்… பார்த்துட்டேன்… பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா…இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.

மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.

படத்தில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் நிறைகளில் எல்லாம் மறந்துவிடுகின்றது.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்

Comments

Popular posts from this blog

Navagraha Temples - Route Map (Powered by Google)

NetGear DGN1000 - MTU, Partial Loss of Internet Connection, and Performance

Layoffs Cut Deeper Into Economy....... As Recession Hits Most Industries, Corporate Giants Slash Jobs